அருட்பெருஞ்சோதி அண்ணல் யாஸீன் (ரலி)

பூரணத்திலிருந்து பூரணம் வந்த பின்பு பூரணமே எஞ்சி நிற்கின்றது என்பது முதுமொழி. அன்றும் பூரணம்; இன்றும் பூரணம்; இனி என்றும் பூரணம் என்பதை பூரணமாக உணர்ந்து நித்தம் நித்தம் புத்தம் புதியதாக தோன்றிய போதும் அது முன்பு உள்ளதுபோல் தான் இன்றும் உள்ளது என்று நிற்பவர்களே மாகன்கள். குத்புமார்கள்.

அல் இன்ஸானுல் ஸிர்ரீ வ அன ஸிர்ருஹு – நான் மனிதனின் இரகசியம்; மனிதன் என்னுடைய இரகசியம் என்று பூரணமாகிய ஏக உள்ளமை எடுத்துக்காட்டுகிறது. அந்த ஏக உள்ளமையின் தோற்றமாக விளங்கும் மகான்களே இன்ஸானுல் காமிலாகவும் குத்புஸ்ஸமானாகவும் விளங்குகிறார்கள். அவர்களே இன்ஸான் என்னும் இலக்கணத்திற்கு உட்பட்டவர்களாக உள்ளார்கள். அவர்களே இறைவனின் இரகசியமாக உள்ளார்கள். இறைவனும் அவர்களின் இரகசியமாக உள்ளான். அவர்களே உலக மக்களுக்கு அந்தந்த காலங்களில் குருவா(செய்கா)க அமைந்து உலகத்திற்கும் உலக மக்களுக்கும் அருட்கொடையாகவும், வழிகாட்டியாகவும் விளங்கும் யுகநாயகர்களாக விளங்குகிறார்கள். அதனால்தான் இறைவனை நேசிக்க விரும்புகிறவர்கள் தங்கள் குருவினை நேசிப்பது மனிதகுலத்தின் கடமை என்றும் கூறப்படுகின்றது. குருவின் நேசமே மனிதர்களை இறைவனின் அரியாசனத்தின் அளவில் கொண்டு சேர்கிறது. குரு வசியப்பட்டால்தான் இறைவன் வசியப்படுவான். 

 இந்துமத வேதாந்திகளும்

‘’குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவு மகேஸ்வரா குரு சாட்சாத் பரபிரஹ்ம தஸ்மய் ஸ்ரீ குருவே நமோ’’ என்று குருவிற்கே முதல் வணக்கம் செலுத்துகிறார்கள்.

அல்லாஹ்வும், அமரர்களும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸ்தோத்திரம் (ஸலவாத்) சொல்லுகிறார்கள், ஈமான் கொண்டவர்களே! நீங்களும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் சொல்லுங்கள் என்று ஏக இறை மறைமொழி மூலம் குருபுகழ் பாடுகிறான்.

 குரு அர்ப்பணம் சர்வதுக்க பரிகாரம். ஒருவன் குருவை அடையாமல், குருபுகழ் பாடாமல் குரு சேவை செய்யாமல் ஒருக்காலும் வாழ்வில் நிறைவடைய முடியாது. மோட்சத்தின் வாயிலைக் கூட எட்டமுடியாது. குருவருல் இல்லாமல் திருவருள் கிட்டாது. குருவின் மகிமை அபார மகிமை. குரு காரண கரியங்களுக்கு அப்பாற்பட்டவர். எதையும் செய்யவோ, சாதிக்கவோ காரணங்கள் தேவையில்லை. அசாத்தியங்களையும் சாத்தியமாக்குபவர்.

‘’குருவைப் பார்க்கின் கோடி நன்மை’’ என்று அதனால்தான் பெரியார்கள் கூறுகின்றனர். மனதளவில் குழந்தையாய் இருப்பவர்களுக்கு மட்டும்தான் குருவின் நிழல் பரிபூரணமாய் கிடைக்கும்.

தவம், ஞானம், தானம், பற்றின்மை, தர்மம் இவைகளைக் கொண்டு அடையும் அத்தனைப் பேற்றினையும் விட குரு சேவையே மேலானது. சொர்க்கமாக இருந்தாலும், சொர்கத்தின் அதிபதியாயிருந்தாலும் அதைவிட்டோ அவரைவிட்டோ குரு நீங்குவரானால் கல்வி, செல்வம், வளமை அனைத்தும் அவரைவிட்டும் அதனைவிட்டும் நீங்கி விடும்.

குருவே சத்ய சொருபி. காலத்தின் இமாமாக, யுகநாயகராக விளங்கும் குருவின் கரம் பற்றியவனே எல்லோரிலும் மேலானவன்.  ஜகத் குருவாகவும், பிரபஞ்ச அருட்கொடையாகவும், காத்தமுன் நபியாகவும் விளங்கிய எம்பெருமானார் நபிகள் நயாகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கரம்பற்றிய காரணத்தால்தான், அவர்களுக்கு சேவை செய்தமையால்தான், சஹாபாக்கள் வானத்தின் விண்மீகள் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் போற்றப்பட்டார்கள். சஹாபாக்களில் எவரை பின்பற்றியவரும் வழிதவறமாட்டார்கள் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருவாய் மொழிந்தார்கள். 

காமிலான செய்குமார்களே (குருமார்களே) அவர்கள் கரம்பிடித்த சத்திய சகோதரர்களை அஹ்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லலம் அவர்களின் வாயிலளவில் கொண்டு சேர்க்கும் வல்லமை கொண்டவர்கள். அந்த வகையிலே இன்று காலத்தின் உத்தமராக குத்புஸ்ஸமானாக விளங்கும் சங்கைக்குரிய ஜமாலிய்யா செய்யது கலீல் அவ்ன் மெளலானா நாயகம் அவர்களை குருவாகக் கண்டவர்கள் – குருவாகக் கொண்டவர்கள் ஈடேற்றமடைந்தவர்களாக விளங்குகிறார்கள். அவர்களின் செய்காகவும், ஆசானாகவும் சங்கைக்குரிய தந்தையாகவும் இலங்கும் குத்புகள் திலகம் ஜமாலிய்யா செய்யிது யாஸீன் மெளலானா நாயகம் (ரலி) அவர்கள்;

அருள் மொழி அண்ணலாய், நிறையுரை மொழி மன்னராய், அறம்பொலி வள்ளலாய், அறிவுறை நாதராய், அன்புறை உருவாய், பண்புறை ஆரருவுருவாய்ப் புகழ்மிகு ஏகனாம் வியபகி அல்லா(ஹ்)வின் ஒப்பறு நபியாய் உத்தம ரஸூலாய், நித்தியத்தூதராய், மண்டிருள் போக்கி நிறைமருள் நீக்கி, மானிடத்தன்மை இன்னதென்றுணர்த்தி, பாப நிவர்த்தி அளித்து மக்களை மக்களாயுணர்த்த நிகரிலா நித்திய இறையொன்றே யெனும் தத்துவமாமுயர் தெளஹீதென்னும் மெய்யுயர் ஞானம் போதித்துணர்த்த அகிலத்துறையும் அனைத்துப் பொருள்களும் உயிரினும் மேலனக்கருதும் திருத்தலம் மக்கா மாநகரிலே அவதாரஞ் செய்தருளிய எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வமிச பாரம்பரிய மதனிலே முப்பத்து மூன்றாம் அருந்தவத் தோன்றலாயும் ஜீலான் என்னும் திருப்பதிதன்னிலே பாரவரேத்தும் விரிகதிர்ப் பரிதியாய் யாங்கும் யாண்டும் பெரும் புகழ் பரப்பி மெய்யுயர் ஞான இன்சுடர் விரித்து இஸ்லாம் உய்யத் தொண்டுகள் ஆற்றி மானிடர் வாழ்வை பக்தாத் என்னும் திருப்பெயர் கொண்ட அருள்நநிறைநகரிற் பள்ளி கொண்ட குதுபுகள் திலகம் சோதி சொருபி, அருந்தவப் பெருமகான் முஹிய்யுத்தீன் அப்துல்காதிர் ஜீலானிய் அவர்கள் வமிச பாரம்பரியம் தன்னிலே இருபதாம் தோன்றலாயும், மாதா வழியிலே ரஸூலுல்லாஹ் அவர்களிலிருந்து முப்பத்திரண்டவது தோன்றலாயும், முஹ்ய்யுத்தீன் ஆண்டவகர்களிலிருந்து பத்தொன்பதாவது தோன்றலாயும், அருந்தவப் பெரியார் குருநாதர் ஜமாலிய்யா அஸ்ஸையித் யாஸீன் மொளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஸிமிய் நாயகம் (ரலி) அவர்கள் ஈழமணிதீவதன் தென்கரை தன்னிலே நற்பதியாம் திக்குவல்லை என்னும் ஊரிலே தவமிகு தந்தையார் ஆத்மஞானச் சுடர் அல் ஆரிபுஸ் ஸமதானிய் வல் வலிய்யுல் அஸ்ஸைய்யித் முஹம்மத் மொளலானல் காதிரிய்யுல் ஹஸனிய்யுல் ஹாஸிமிய்யு (ரலி) என்னும் ஜமாலிய்யா மொளலானா அவர்களுக்கும் தாயார் உம்மு ஹபீபா கண்ணே அவர்களுக்கும் திருமகனாக திருவவதாரஞ் செய்தார்கள்.

கல்விச் சாலைகளின் அறிவாகிறது விவரண விளக்கத்திலே ஜமாலிய்யா யாஸீன் மொளலானா நயாகம் (ரலி) அவர்களின் இயற்கை அறிவிலிருந்துள்ள ஒரு புள்ளிக்கும் நிகராகாது. அவர்கள் உள்ளாலுள்ள தன்மைகளை சாதரண மக்கள் அறிய இயலாது.

 சத்திய ஹக்கைத் தேடுகிறவர்களில் அனேகர் ஒளித்திரைகள் ஒவ்வொன்றிலும் மருட்சிகொண்டு மிக உயர்ந்த குறி (அடையாளம்) அளவில் முயற்சித்துப் போகிறதை விட்டு மருட்டப்பட்வர்கள் மொளலானா நாயகத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள்.

ஏனெனில், அந்த அல்லாஹ், எனது சத்தான ரூஹும் எனது உள்ளமும் உடலுமாகும் என்றும்; சிருஷ்டிகள் என்னை எவ்வாறு அறிவர்? நானோ எனது கர்த்தாவின் ஜோதியிலே மறைந்து மேலும் வெளிவந்து மறைகிறேன் என்றும்; தமது முழுமையினை தமது யவானிஉவில் சங்கைக்குரிய மொளலானா நாயகம் (ரலி) அவர்களின் தேவ உதிப்பு எடுத்தியம்புகிறது.

ஹக்கியத்துல் காதிரியாவின் மூலவராகிய சங்கைமிகு மொலானா நாயகம் (ரலி) அவர்கள் ஞானக் கடலில் முற்றிலும் மூழ்கி முத்தெடுத்தவர்களாக விளங்கினார்கள். மொளலானா நாயகம் (ரலி) அவர்கள் தர்க்க சாஸ்திரத்தில் தமக்குதாமே ஒப்பாராக விளங்கினார்கள்.

மொளலானா நாயகம் (ரலி) அவர்களை தர்கத்தில் வெல்லவேண்டும் என்று விரும்பிய சிலர் ஒரு நாற்காலியைக் காட்டி இதில் இறைவன் இருக்கிறானா? என்று வினவினார்கள். இதற்கு சொல்லும் பதிலைக்கொண்டு நாயகமவர்களை வென்றுவிடலாம் என்று மனப்பால் குடித்து அமர்ந்திருந்தார்கள்.

நாயகமவர்கள் "நாற்காலியில் நாயன் இல்லை என்பவன் காபிராகிவிடுவான்; நாற்காலியில் நாயன் உண்டு என்பவன் முஷ்ரிக் (இணைவைப்பவன்) ஆகி விடுவான்" என்று கூறி வாயடைக்க வைத்தார்கள். இருக்கிறது என்பதற்கும் இல்லை என்பதற்கும் இடையே உள்ள உண்மையை விளக்கி இறையின் முழுமையை எடுத்து காட்டினார்கள்.

சங்கைக்குரிய நமது ஷெய்கு நாயகம் அவர்கள் பூனைக்கு அது சாப்பிட சாப்பிட உணவு அளித்தபோது "மகன், பூனையின் கூன் நிமிரும் அளவு உணவளித்தால் போதும்; தொடர்ந்து கொடுத்தால் அது தின்று கெண்டேதானிருக்கும் என்று உணவு அளிப்பதற்கும், உணவு உண்ணுவதற்கும், வாழ்விற்கும் இலக்கணம் வகுத்தார்கள்.

நமது சங்கைக்குரிய ஷெய்குநாயகம் ஜமாலிய்யா செய்யிது கலீல் அவ்ன் மொளலானா நாயகம் அவர்கள் தங்கள் தவமிகு தந்தையும் ஷெய்கு நாயகமுமாகிய குத்புகள் திலகம் ஜமாலிய்யா அஸ்ஸெய்யிது யாஸீன் மொளலானா நயாகம் (ரலி) அவர்கள் மீது உயிருக்கு மேலான அன்பும், பக்தியும் வைத்திருத்திருந்தார்கள்; வைத்திருக்கிறார்கள்.

வெலிகமாவிற்கு முதன்முதலில் நானும், மதுக்கூர் அபுசாலிபு அவர்களும் புனிதப் பயணம் செய்தபொழுது அங்கு சங்கைக்குரிய ஷெய்கு நாயகம் அஸ்ஸெய்யிது யாஸீன் நாயகம் (ரலி) அவர்கள் வாழ்ந்த அறைக்குள் அழைத்துச் சென்றபொழுது அங்கு அவர்கள் தங்கள் தந்தை நாயகம் குத்புகள் திலகம் அவர்கள் உபயோகித்த கட்டில் பொருட்களை தொட்டு முத்தமிட்ட பின்பே அதைப்பற்றி விவரித்தார்கள். குரு பீடம், குருவின் காலணி, குரு தொட்ட இடங்கள் எல்லாம் புனிதமானவை.

சில வருடங்களுக்கு முன் ஓர் அழகிய கனவு கண்டேன். அதில் சங்கைக்குரிய யாஸீன் மௌலானா நாயகம் (ரலி) அவர்கள் கனவில் தோன்றி "இந்த நிலை உங்களை நாஸ்திகத்தில் கொண்டுபோய்ச் சேர்த்து விடாதா?" எனக்கேட்டார்கள். அதற்கு நான் " இல்லை என்பது என்றும் இருந்து கொண்டுதானே இருக்கிறது" என பதில் கூறியவுடன் பெரிய நயாகமவர்கள் ஆனந்த மேலீட்டால் குலுங்கி குலுங்கி சிரித்தார்கள். சிரித்துவிட்டு கற்கண்டை எனக்கு கொடுத்தார்கள். அருகே இருந்த ஹுஸைன் முஹம்மது ஆலிமுக்கு நான் சிறிது கொடுத்தேன். அவர் மேலும் வேண்டுமென்று கேட்க எனக்கு வேண்டுமென வைத்துக் கொண்டேன். அக்எனவின் கண்கொள்ளா காட்சி இன்றும் என் நெஞ்சைவிட்டகலாமல் நிலை கொண்டிருக்கிறது.

இந்த கனவைப்பற்றி சங்கைமிகு நமது ஷெய்கு நாயகம் அவர்களிடம் கூறிய பொழுது "எங்கள் தந்தை நாயகம் எங்கள் தரீக்கா முரீதுகள் சரியான முறையில் உண்மையை அறிந்திருக்கிறார்களா என்பதையே இது காட்டுகிறது" என சிரித்துக்கொண்டே கூறினார்கள்.

இருந்தும் மறைந்தும் உலக மக்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகவும், ஞான சூரியனாகவும் சங்கைக்குரிய மௌலானா நாயகம் (ரலி) அவர்கள் விளங்குகிறார்கள். நடமாடும் பல்கலைகழகமாக விளங்கிய நாயகமவர்கள் இகபரம் இரண்டிலும் நம்மை காத்து இரட்சிக்கும் கௌதாக விளங்குகிறார்கள். கஷ்டங்களை யாஸீனை நாடு! நீ நாடுகிறதை நல்ல பாதுகாப்பை அடைவாய்.

மேற்கும் என்னைக்கொண்டே கிழக்கும் என்னைக் கொண்டே. மேலும் என்னைக்கொண்டே கீழும் என்னைக் கொண்டே; என்று தனது தேவ உதிப்பின் மூலம் நம்மை இரட்சித்து காக்கும் உத்திரவாதத்தை தருகிறார்கள். யாஸீன் (ரலி) அவர்களை நாடுவோம்! ஈருலக பேற்றினை அடைவோம்!