தொகுப்பு: ஆதம்  A. அப்துல் குத்தூஸ் (மதுக்கூர்‍) - camp Dubai.

தொகுப்பு: ஆதம்  A. அப்துல் குத்தூஸ் (மதுக்கூர்‍) - camp Dubai.

மனிதனே நீ உன்னை உணர்ந்து கொள்.

 

சங்கைக்குரிய ஷெய்கு நாயகமவர்களின் அமுத மொழிகள்

மனிதனே நீ உன்னை உணர்ந்து கொள்.

மனிதனே உன் உடலை ஓருலகமாக நினத்துக் கொள். உன் மனம் தான் அரசன். நீ நினத்தபடியொல்லாம் இந்த உலகத்தை ஆட்சி செய்ய முனையாதே. அப்படி செய்தால் உன் உலகமே கெட்டு விடும்.

மனிதனே ஒரு செயலைச் செய்யுமுன் நீ மிகவும் அதிற் சிந்தனை செலுத்து. பின்னர் அதனை உடனே செய்து விடாதே. மெல்ல மெல்லச் செய். சீக்கிரமே செய்ய வேண்டிருப்பின், நீ அதிற் சிந்தனை செலுத்திய வண்ணமே செய்.

மனிதனே, ஒரே விஷயத்தை நாள் முழுவதும் சிந்தித்து உன் மூளையை வீணாக்கி விடாதே. உன் சிந்தனைக்கும் அளவுண்டு. சிந்தனை உன்னை மீறி விடக் கூடாது. அப்போது உன் உலகம் தடுமாறும். பூகம்பமே ஏற்பட்டு விடும். உனக்கு நரம்பு தள்ர்ச்சி ஏற்படும். கடைசி வரை உன்னை அது வாட்டும். அச்சம் உண்டாகும். உனக்கு பித்துப் பிடிக்க ஆரம்பிக்கும். வைத்தியர்களுக்கு பணம் சம்பாதிக்க இது ஒரு சிறந்த வழியாகி விடும்.

மனிதனே, சிந்தனையைச் சீராய்ச் செலுத்து. உடனே உன் செயலில் இறங்கி விடு. திடமாய் அதனைச் செய். சிந்தனையில் தடுமாறுபவன் நடுக் கடலில் தத்தளித்தப்பவன். அவனுக்கு சொல்லும் புத்திமதிகள் கானில் வீசும் வெண்ணிலவாகும்.

மனிதனே, எல்லோரும் சொல்லும் சிந்தனைகளைக் கேட்டுக் கொள். இவர்களில் நல்லவர் எவர் என்பதை நீ பிரித்துப் பார்த்துக் கொள். பின் சிந்தித்துப் பார். இப்போது இந்த சிந்தனைகளில் எது நல்லதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்.

மனிதனே! நானே எல்லாம் தெரிந்தவன்; எல்லாம் அறிந்தவன். என் சிந்தனை தான் மேலானது. என்னை விட மேலானவனும் புத்திசாலியும் வேறு எவனும் இல்லை. நானே அனுபவசாலி என நினைத்து உனக்கு மூத்தவர்களை உதாசீனம் பண்ணி விடாதே. அந்தோ! நட்டமடைவாய். பயனடைய மாட்டாய்.

மனிதனே! நல்ல சிந்தனை உன்னை நல்ல மனிதனாக்கி விடும். உன் கெட்ட சிந்தனை உன்னைப் படுகுழியில் வீழ்த்திவிடும். கெட்ட சிந்தனை ஒருவன் விரும்பாத ஒன்றை மீறி அல்லது வற்புறுத்திச் செய்யத் தூண்டிவிடும். அவ்வாறு செய்வதைக் கொடிய நடத்தை எனக் கூறலாம். எனவே, மனிதனே, நீ நல்லதென விரும்பியதை மற்றவனும் ஏற்றுக் கொள்ளக் கூடியதைச் செய். இல்லையாயின் நீ பாபஞ் செய்தவனாவாய்.

மனிதனே, உனக்கு அனுமதியில்லாத ஒன்றைச் செய்யாதே. செய்தால் கவலைப்படுவாய்.

மனிதனே! நீ விரும்பினாலும் மற்றவன் விரும்பி அனுமதிக்காத ஒன்றை நீ செய்யாதே. அது உனக்குத் தொல்லை தரும்.

மனிதனே! உன்னைப் போல் மற்றவனிருக்கமாட்டான். ஒருவேளை மற்றவன் பண்புக் கெட்டவனாயிருப்பான்; நயவஞ்சகனாயிருப்பான்; கொலையாளியாயிருப்பான்; கன்னெஞ்சனாயிருப்பான்; பொய்யனாயிருப்பான்; கயவனாயிருப்பான்; நீசனாயிருப்பான்; ஆதலால் மனித சமுகம் எனக் கூறிக் கொள்ளூம் இதை நல்லபடி அறிந்து தெளிந்துக் கொள். அதன்படி நடந்துக் கொள்.

மனிதனே! உன் வெள்ளை மனத்தால் நீ கெட்டுப் போகவும் கூடும். நீ சிறப்படையவும் கூடும். உன்னை போன்றவன் உன்னை மெச்சுவான். உன் குணத்திற்கு எதிரானவன் உன் அன்பை உன்னைக் கெடுக்கப் பயன்படுத்தும் ஆயுதமாக்குக் கொள்வான். ஆதலால் மனிதனின் நிலைமைகளைக் கண்டறிந்து தொடர்பு கொள்.

மனிதனே! கூடிப் பழகும் போது எவன் மனிதன் என்பதை உன்னால் அறிந்து கொள்ள முடியுமாயின் நீ பயிற்சியுள்ளவன். நீ உன்னைப் பாதுகாக்க முடிந்தவன். இன்றேல் கைதேசமே.

மனிதனே! உலகம் ஒரு பயிற்சி மேடை. உன்னோடு பழகும் மனிதனின் பண்புகளை நீ அறிந்து கொள். அதன்படி நடந்து கொள்.

மனிதனே! கொடிய மிருகத்துடனும் பழகலாம். ஆயினும் கொடிய மனிதனுடன் பழகுவது பேராபத்து. ஏனெனில் இவனுக்கு கொம்பில்லை. வம்புண்டு. சொல்லம்புண்டு.

மனிதனே! முட்டாள் எவன்? எல்லாம் தனக்குத் தெரியும் என நினைத்து மட்டும் இருக்காது மற்றவனுக்கும் புத்திச சொல்லித் திரிபவன், இவன் மற்றவர்களின் வெறுப்பைச் சீக்கிரமே சம்பாதித்துக் கொள்வான்.

மனிதனே! மற்றவர்கள் செய்வன எல்லாவற்றையும் திருத்தியமைக்கப் போய் விடாதே. மிக முக்கியமாக உள்ளதை மட்டும் திருத்தப் பார். அப்படி நீ எல்லாவற்றிலும் தலையிடப் போனால், உனக்கு அதிகம் தெரிந்த முட்டாள் எனப் பெயரை வைத்து விடுவார்கள்.

கண்டதையொல்லாம் திருத்தியமைக்கப் பார்ப்பவன், எல்லாவற்றையும் குறைக் கண்ணால் பார்ப்பவன், இவன் கண்ணுக்குன் நிறைவு தென்படாது.

மனிதனே! நீயும் மனிதன். மற்றவனும் மனிதன். உனக்குள்ள அவயங்களே அவனுக்கும் உண்டு. ஒருவேளை உன் முரட்டுக் குணம் அவனிடமிராது. அமைதியானவனாகவும், நல்லவனாகவும் இருப்பான். இதை நீ உணர்ந்து கொள். ஆதலால், நீ சுடு வார்த்தைகளை உபயோகிக்காதே. கடுகடுப்புடன் சடும் வார்த்தைகளைப் பேசாதே. மற்றவனும் என்னைப் போல் மனிதெனக் கருது. அப்படியானால்தான், நீ மனிதப் பண்புள்ளவன்.

மனிதனே! பண்புள்ளவன் யார்? மற்றவனுடன் (அவன் பெரியவனோ, சிறியவனோ) அமைவுடன் அமைதியாய் நடந்து கொள்பவன், மற்றவனின் குண நடத்தைகளை அறிந்து குறைவின்றி நடந்து கொள்பவன்.  யாருடனும் தகுதிக்கேற்ப மரியாதையுடன் நடப்பவன் திடீரென சீறிப் பாயாதவன். சமயோசித புத்தியுள்ளவன். மற்றவன் சொல்வதையும் கேட்டு, நேரகாலத்திற்கேற்ப நடந்து கொள்பவன். மற்றவன் மத்தியில் தனக்குத் தெரியாத தொன்றுமில்லையெனப் படாடோபமாய் நடந்து கொள்ளாதவன். தன்னையே கேட்டு நடக்க வேண்டும் எனும் குறுகிய புத்தியில்லாதவன்.

மனிதனே! நீ முழுமையும் சரியானவன் என உன்னை எண்ணிக் கொள்ளாதே அப்படி எண்ணுபவன் முழுமை முட்டாள்.

மனிதனே! நீ உன்னை முழுமையாக உன் மனக் கண்ணாடிக்குள் பார்த்து அதன்படி குற்றங்களை களைந்து கொள். ஓரளவாவது நீ களைந்து கொண்டால் உனக்கு மனிதன் என்னும் பெயர் பொருத்தமானது.

மனிதனே! அவ்வாறே உன் உடலையும் நிலைக் கண்ணாடியில் பார்த்து ஒழுங்கு படுத்திக் கொள். இல்லையாயின் உன் விகாரமான தோற்றத்தை உன்னால் பார்த்துக் கொள்ள முடியாது. மற்றவன் கண்டு சிரிக்க அல்லது வெறுக்க அது ஏதுவாகும்.

மனிதனே! உன்னுடைய சூக்கும தூல உடல்கள் உனக்கு பூரண திருப்தியைத் தர வேண்டுமானால், உன் உள்ளம் அவற்றைச் சரியென ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.

மனிதனே! மற்றவனை முட்டாளென ஒருவன் கருதுவானாயின் அவன் தானும் தன்னை முட்டாள் எனக் கருதி கொள்ளல் வேண்டும்.

மனிதனே! நீ மற்றவனை ஏளனமாக கருதாதே. அதே ஏளனம் உன்னையே வந்தடுக்கும்.

மனிதனே! உன்னை போன்றவனே மற்றவனும் எனக் கருதாதே. அது தெளிவற்ற கருத்து.

மனிதனே! மரியாதையை தேடாதே. நீ தேடினால் அது உன்னை விட்டு ஓடிவிடும். நீ பிறருக்கு மரியாதை செய். மற்றவர்கள் உனக்கு மரியாதை செய்யத் தேடி வருவார்கள்.

மனிதனே! செய்வேன் செய்வேன் என இருக்காதே. சிந்தனையுடன் செயலாற்ற இறங்கி விடு.

மனிதனே! உன் செயலுக்கு பகைகள் பல உள. அவை காலம், இடம், தொழில் வகை உன் குண நடத்தை முதலானவைகளாகும்.

மனிதனே! முன் சிந்தனை இல்லாமல் உடனே பேசி விடாதே. பின்னால் கைசேதமடைவாய்.

மனிதனே! பேசும் முறையறிந்து பேசு. தவறிவிட்டால் நீ பணிய நேரிடும். வெட்கி தலை குணிய நேரிடும்.

மனிதனே! ஒருவருடன் பேசும் முன் நான் யாருடன் பேசுகிறேன் என நீ சிந்தித்துப் பார்.  ஆளையும் தன்மையையும் அறிந்து பேசு. இல்லையானால் நீ உன் நீசத் தன்மையை மற்றவர்களுக்குக் காட்டி விடுவாய்.

நன்றி: மறைஞ்ஞான பேழை.

உண்மையிலிருந்து வெளியான மனிதன்

 

சங்கைக்குரிய ஷெய்கு நாயகமவர்கள் அருளுகிறார்கள்:

உண்மையிலிருந்து வெளியான மனிதன்

மனிதனே! நீ உண்மையை உணர்ந்துக் கொள். நீ உண்மையிலிருந்தல்லவா வெளியானாய். ஆதலால் உன் உடலுக்கு மெய்யென ஒரு பெயரும் உள்ளதல்லவா? நீ உண்மையிலிருந்து வெளியானதும் நீ உன்னைப் பொய்யென நினைத்துப் பொய்யான உலக வாழ்வில் மருண்டு விட்டாய். திரும்பவும் நீ உன்னை நினைத்துப் பார். அப்போது உன்னை நீ யாரென அறியக் கடவாய்.

மனிதனே! உண்மைக்குப் பல எதிரிகள் உள்ளார்கள். அவர்கள் அழியமாட்டார்கள். எங்கு அவர்கள் குடிகொள்வார்களோ அவ்விடத்தை அடியோடு அழித்து விடுவார்கள்.  இந்த எதிரிகளை நீ மனமார வாழ்த்தி உள்ளத்தில் நிரப்பமாய்க் குடியிருக்க வைத்து விடுவாய். அவர்களால் உனக்குன் ஏற்படும் பேரழிவை நீ சிந்திப்பதில்லை. அவர்கள் தாம், கோபம், சந்தேகம், கடும் பொறாமை, தற்பெருமை, கெடும் சுயநலம், நயவஞ்சகம் போன்றவர்கள்; இவர்கள் குடியிருக்கும் இல்லம் மானிட ஜன்மத்தின் உள்ளம்.

மனிதனே! நீ கோபப்படு. வேண்டாம் எனக் கூறவில்லை. உன் கோபம் மற்றவர்களையோ உன்னையோ அழிவுபடுத்தாதிருக்க வேண்டும். உன் கோபம் நன்மைக்காகவே இருக்க வேண்டும். கோபம் இல்லாதவனை மனிதனென‌வும் கூற முடியாது.

மனிதனே! உன் சந்தேகம் உன்னை முன்னேற்றக் கூடியதாய் இருக்க வேண்டும். உன் சந்தேகம் உன்னையோ நீ சந்தேகம் கொண்டவரையோ அழிக்காதிருக்க வேண்டும். அறியாதவற்றை அறிந்தவரிடம் அறிந்து கொள்வது சந்தேகத்தை நீக்கிக் கொள்ளும் வழியாகும். சந்தேகத்துடன் இறக்காதே. அது உனக்குக் கேடான முடிவாகும்.

மனிதனே! பொறாமை இல்லாவிட்டால் மனிதனுக்கு முன்னேற்றமே இருக்காது. உன்னைவிட மற்றவன் அறிஞன் அல்லது பணக்காரன் அல்லது வேறேதும் காரணங்களுக்காக நீ மற்றவனை பொறாமை கொண்டு அவனுடைய இடத்திலிருந்து அவனைத் தட்டிக் கீழே தள்ளிவிட முயற்சிக்காதே. அது உனக்கு பேரிட. நீயும் அவர்களை வாழ்த்தி அவர்களைப் போலாக முயற்சி செய். எது நல்லது? உனர்ந்து பார்.

மனிதனே! உன்னிடத்தில் எவ்வளது இருக்கிறதோ அவ்வளவுக்கு மட்டுமே நீ தற்பெருமை கொள். எல்லாம் உனக்கும் தெரியுமென தற்பெருமை கொள்ளாதே. அந்தத் தற்பெருமை உன்னை உயர விடாது தடுக்கும் தடை கல்லாகும். உன்னிடம் எவ்வளவு உள்ளதோ அதை அணுவளவாய்க் கருது. மலையாய் கருதாதே. நீ மலையாய் கருதினால் அது உன்னை மறுபக்கம் கவிழ்த்து விடும். நீ கற்றவற்றை மறந்து விடுவாய். உன் பணத்தையும் இழந்து விடுவாய். உன் பலத்தையும் இழந்து விடுவாய்.

மனிதனே! உனக்கு சுயநலம் மிக முக்கியமானது. ஆனால் அது பிறர் நலத்துடனும் கலந்ததாக இருக்க வேண்டும். உன் சுயநலம் மற்றவனைப் பிடுங்காமலும் தாழ்த்தாமலும் அழிக்காமலும் இருக்கட்டும்.

மனிதனே! உன் உள்ளத்தில் நயவஞ்சகம் பள்ளிக் கொண்டால், நீ நயவஞ்சகன் என்னும் பட்டத்தைப் பெற்று விடுவாய். உனக்குன் மூவுலகிலும் இடமில்லை. உன்னை அணு முதலாம் எல்லா உயிர்களும் தூற்றும். உன்னைப்போற் கொடியவன் உலகில்லை. உலகத்தையே அழிக்கும் உபாயம் உன்னிடத்தில் தான் உண்டு.

மனிதனே! (பணக்காரனே) நீ சம்பாதித்த, உனக்கு பணக்காரன், வள்ளல் எனவெல்லாம் பெயர் தந்த பெரும் பணம் உன்னுடையது அல்ல. உன்னுடைய உரிமை என நினைத்துக் கொள்ளாதே. ஏழை, எளியவர் வேர்வையை இரத்தமாக சிந்திச் சேமித்த பணத்தைத் தான் நீ எளிதாய் கூட்டிக் கட்டுக் கட்டாய் வைத்துள்ளாய். அதையெடுத்துப் பிழிந்து பார்த்தால் அதிலிருந்து ஏழை எளியோரின் இரத்தம்தான் ஓடும். இது உன் பணமல்ல. பொதுப் பணம். இது இறைவனுக்கே சொந்தம். ஆதலால் பெருமை பேசாதே. கவனமாக இரு. ஏழைகளை கவனிப்பாயாக. இறைவனைப் பயந்து கொள்.

நன்றி: மறைஞ்ஞான பேழை.