1) ஆத்மகுரு ஷெய்கு நாயகம்,  2)  தந்தை நாயகம்,  3)  அப்பா நாயகம்

தொகுப்பு: ஆதம்  A. அப்துல் குத்தூஸ் (மதுக்கூர்‍) - camp Dubai.

 1) ஆத்மகுரு ஷெய்கு நாயகம்,  2)  தந்தை நாயகம்,  3)  அப்பா நாயகம்

தொகுப்பு: ஆதம்  A. அப்துல் குத்தூஸ் (மதுக்கூர்‍) - camp Dubai.

ஆத்மகுரு ஷெய்கு நாயகம்

 

 
குதுபுல் அக்தாப், சாஹிபுல் வக்த், ஷ‌ம்ஸுல் வுஜூத், அஷ்ஷெய்கு ஜமாலிய்யா
அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா
அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்


 

சத்திய ஹக்கின் சம்பூரண தோன்றதுறையும் இருலோகர் இரட்சகர் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் அந்தரங்க வெளிப்பாடும் முஹைய்யதீனிய சந்நிதானத்தின் பிரதிநிதியும் ஆகிய எங்கள் ஆருயிர் ஷெய்கு நாயகம் குதுபுல் அக்தாப், சாஹிபுல் வக்த், ஷம்ஸுல் வுஜூத், அஷ்ஷெய்கு ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் 1937ஆம் வ‌ருட‌ம் டிச‌ம்ப‌ர் மாத‌ம் 20ஆம் தேதி (ஹிஜ்ரி 1356ஆம் வ‌ருட‌ம் ஷ‌வ்வால் மாத‌ம் பிறை 16) திங்க‌ட்கிழ‌மை காலை 8.30 மணிக்கு, குதுபுல் அக்தாப், குதுபுல் பரீத், சாஹிபுல் வக்த், ஷம்ஸுல் வுஜூத், அஷ்ஷெய்கு ஜமாலிய்யா அஸ்ஸய்யிது யாஸீன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) அவர்களுக்கும் மாதர் திலகம் அஸ்செய்யிதா ஸஹர்வான் கண்ணே (ரலி) அவர்களுக்கும் ஈழமணித்தீவதன் தென்கரை தன்னிலே விளங்கும் இயற்கை எழில் கொஞ்சும் வெலிப்பிட்டி எனும் சிற்றூரில் திருமகவாக, சுயம்பாக இவ்வவ‌னியில் பிரசன்னமானார்கள். 

ஷெய்குபிரான் கலீன் அவ்ன் மௌலானா

இவர்கள் இளம்வயது முதலே ஹக்கின் பக்கம் ஈர்க்கப்பட்டவர்களாய்த் திகழ்தார்கள். அகமியத்தின் அற்புத நிகழ்வுகள் அவ்வப்போது அவர்களுக்குத் தென்பட்டுக் கொண்டே இருந்தது. இளம் வயதிலேயே அவர்கள் திருக்குர்ஆனை முழுவதுமாக‌ ஓதி முடித்து விட்டார்கள். திருக்குர்ஆன் ஓத தொடங்கியது முதல் மற்ற எல்லா அரபுக் கலைகளையும் அவர்களின் அருமை தந்தை நாயகம் அவர்களிடமே முறைப்ப்டி கற்றுத் தேர்ந்தார்கள். அவர்களின் தந்தை நாயகம் அவர்களுக்கு நிகராக இல்முகளைக் கற்ற பட்டங்கள் பல பெற்ற ஆய்வுகள் செய்து டாக்டர் பட்டங்களுக்கு நிகராக பட்டயங்கள் பெற்ற, ஆசிரியர்கள் இவ்வனியில் எந்த ஓர் அரபிக் கல்லூரியிலும் இருக்க முடியாது. அவர்களின் தந்தை நாயகம் அவர்கள் கற்றதை கசடறக் கற்றதோடு நில்லாமல் அதற்கு ஏற்றவாறு தம் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய மாமேதையாகும். அவர்களி கல்வி திறமைய, ஆன்மீக பேரொளியைப் பற்றி அறியாதவர்கள் இலங்கையிலும், இந்தியாவிலும் அக்காலத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நடமாடும் பல்கலைக்கழகத்திலே உள்ரங்க வெளிரங்க இல்முகளைக் கற்றதால் அவர்கள் வேறு ஒரு மதராஸாவில் போய்ச் சேர்ந்து பயில வேண்டிய அவசியமே இல்லாது போனது. அப்படி ஒரு மதராஸாவில் போயிருந்தால் இவர்களின் தந்தை நாயகம் அவர்களிடம் கற்ற கல்விகளை எல்லாம் அங்கு கற்றிருக்கவே முடியாது என்று அவர்கள் திருவாயால் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

எங்கள் அருமை ஷெய்கு நாயகம் அவர்கள் தமது தந்தை நாயகம் அவர்களிடம் பாடம் படித்த செய்திகளை அவ்வப்போது எங்களுக்கு சொல்லிக் காட்டுவார்கள். தந்தை நாயகம் அவர்கள் பாடம் போதிக்கின்ற முறையையும், அவர்களிடம் எங்கள் ஷெய்கு நாயகம் அதபுடன் அமர்ந்து பாடம் கேட்டுக் கொண்ட முறைகளையும் கேட்டு நாங்கள் பெருவியப்படைவோம்.

அதேபோன்று வாழ்க்கைப் பாடத்தையும் அவர்கள் தம் அருமை மகனாருக்குப் போதிக்க தவறவில்லை. இப்படி எல்லா நிலைகளிலுமே தம் தந்தையிடம் கல்வி கற்ற எங்கள் ஷெய்கு நாயகம் அவர்களையும் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் என்றால் அது மிகையாகாது. ஆகவே அவர்களுக்குப் பட்டயம் எதுவும் தேவைப்படவில்லை. மௌலவி பாஸில் வரை எல்லாப் பாடங்களையும் தங்கள் அருமை தந்தை நாயகம் அவர்களிடமே கற்றுத் தேர்ந்தார்கள்.

தம் தந்தை நாயகம் அவர்களிடம் கற்றப் பாடங்கள்:

தப்ஸீர், ஹதீஸ், உஸூல் ஹதீஸ், பிக்ஹு, உஸூல் பிக்ஹு,   அகாஇத், தஸவ்வுப், அதப் இன்ஷா, பலாகத், தாரீக், ஸர்பு, நஹ்வு, மன்திக், இல்முல் மஆனி, பதீஉ, பல்ஸபா, ஹிஸாப், அரூள் முதலானவை ஆகும்.

எங்கள் செய்கு நாயகம் அவர்களின் வாரிதாத் என்ற தெய்வீக வெளிப்பாடுகளிலிருந்து அன்னவர்களின் அகமியத்தின் ஆழத்தை ஓர் அளவுக்கு நாம் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் சிற்றறிவு, பேறறிவு எல்லைகளைக் கடந்து ஹக்கின் திவ்விய திருதரிசன மகிமையில் மூழ்கி இருப்பதால் அவர்களின் அகமியத்தின் பூர்வீகத்தையும் பூரணமாகப் புரிந்து கொள்ள எவராலும் முடியாது.  அது ஆழ்கடலின் ஆழத்தை அறிவதைவிட பன்மடங்கு பாரதூரமானது.

எங்கள் ஆருயிர் செய்கு நாயகம் அவர்களின் ஞான வெளிப்பாடான "இறையருட்பா" எனும் "வாரிதாத்தே இலாஹிய்யா" வில் தன்னிலை விளக்கம் கூறியுள்ளதை சற்று கூர்ந்து கவனித்தால் அவர்களின் அந்தரங்க ஆன்ம நிலையை ஒருவாறு உணரமுடியும். அவர்களின் அதே வாரிதாத் பாடலில் நமக்கு கூறுவனவாய் அமைந்தவற்றில் சில:

"நானாய் மிளிரின் பவம்போகும்

தானே யென்னும் நிலையேகும்

மானே நீங்கி அருவாவாய்

காணாக் கரையும் கண்டிடுவாய்"

"அனைத்து நானே நானென்னும்

நினைப்பில் நித்தியம் நிலைத்திடுவாய்

தினைத்துணை தானும் வேறென்னும்

நினைப்பினை முற்றும் விட்டிடுவாய்"

"அதுவென்ற போதும்

இதுவென்ற போதும்

பதமாற்ற மல்லால்

விதிமாற்ற மில்லை."

என்று கூறியுள்ளதிலிருந்து அவர்களின் ஏகத்துவ வெளிப்பாடு நமக்கு ஒரளவு புலப்படும். இப்படியான தெய்வீக வெளிப்பாடுகள் தமிழிலும், அரபியிலும் ஏராளமாக உள்ளன. ஆனால் அவற்றைப் படித்துப் புரிந்து கொள்ளும் ஆற்றல் நம்மிடமில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.

இனி எங்கள் அருமை செய்கு நாயகம் அவர்களின் புறநிலையைப் பற்றி சற்று அவதானிப்போம்.

ஈழத்திருநாட்டின் தென்பகுதியில் உள்ள மாத்தறை மாவட்டத்தில் வெலிகமா என்னும் நல்லூரில் அறபா சிரேஷ்ட வித்தியாலயாவில் S.S.C. வரை ஆங்கிலத்தை பயிற்று மொழியாகக் கற்று தேர்ந்தார்கள். பின்னர் தமிழின் மேல் அவர்களுக்கு இருந்த தனிப்பட்ட ஆர்வத்தால் மீண்டும் S.S.C. தேர்வை தமிழிலும் எழுதி தேறினார்கள். அவர்களின் சொந்த முயற்சியால் பண்டிதப் பரீட்சை எழுது தேர்ச்சி பெற்றார்கள். பள்ளியில் பயிற்று மொழி ஆங்கிலமாக இருந்தும் தமிழின் மீது அவர்களுக்கு இருந்த ஆர்வமிகுதியால் தமிழ் இலக்கண இலக்கியங்கள் மட்டுமல்லாது சங்ககால ஏனைய நூல்களையும் தாங்களாகவே கற்றுக் கொள்வதில் பேராசை கொண்டு அதில் மகத்தான வெற்றியும் பெற்றார்கள். இதனால் நன்னூல், தொல்காப்பியத்திற் சில பகுதிகள், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம் முதலான் பன்னூல்களையும் மிக எளிதில் கற்கும் நிலை அவர்களுகு ஏற்பட்டது. 1953ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே அவர்கள் தமிழில் கவிதைகள் எழுதத் தொடங்கி விட்டார்கள். இரண்டொரு தமிழ் பாடல்கள் இலங்கைத் தினகரன் பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது.

S.S.C. தேர்வுக்குப் பின் இரண்டு ஆண்டுகள் அவர்கள் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்கள். பின்னர் 'காலி' என்னும் ஊரில் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் படித்து வெற்றி பெற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பெற்றார்கள். ஆசிரியர் பயிற்சி 1962இல் முடிய, 1963ஆம் ஆண்டில் அவர்கள் ஊரிலேயே உள்ள அரசு அரபா மத்திய கல்லூரியில் ஆசிரியர் பணியில் அமர்ந்தார்கள். இங்கு 10 ஆண்டுகள் பணிபுரிந்தார்கள். கிண்டர்கார்டன் முதல் 12ஆம் வகுப்புகள் வரை பாடம் கற்பித்துள்ளார்கள்.

அதன்பின் 1972ஆம் ஆண்டு அவர்களுக்கு அதிபராகப் பதவி உயர்வு கிடைக்கப்பெற்று 'குருணாகல்' என்னும் ஊரிலுள்ள பண்டாகொஸ்வத்தைக்கு மாற்றப்பட்டார்கள். அங்கு ஒருவருடம் சேவை செய்தார்கள். பின்னர் அங்கிருந்து வட்டாரக் கல்வி அதிகாரியாக (CEO) பதவி உயர்வு பெற்றார்கள். 1973ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 5 ஆண்டு காலம் சிலாபம், புத்தளம் வட்டாரங்களில் C.E.O. ஆக பணிபுரிந்தார்கள். பின்னர் 1978ஆம் ஆண்டு அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டார்கள். அங்கு பணியில் இருந்த சமயம் அவர்களுக்கு E.O. Education Officer ஆக பதவி உயர்வு கிடைத்தது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அங்கு கல்வி அதிகாரியாக பணிபுரிந்தும் அவர்களுக்கு மாற்றம் கிடைக்காத காரணத்தால் பணியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார்கள். அன்று முதல் ஆதியிறை அவர்களை ஆன்மீகப் பணிக்கு முற்றிலுமாகத் திருப்பி விட்டது போலும்.

அரபியில் ஆரம்பத்தில் ஒரு சில கவிதைகளையே எழுதியுள்ளார்கள். அன்னவர்களின் அருமை தந்தையும் ஷெய்கும் ஆன யாஸீன் மௌலானா நாயகம்(ரலி) அவர்களின் மறைவுக்குப்பின்னரே அரபியில் ஏராளமான கவிதைகளை எழுதியுள்ளார்கள்.

எங்கள் அருமை ஷெய்கு நாயகம் இந்தியாவிற்கு 1966ஆம் ஆண்டு அவர்களின் தந்தை நாயகம் மறைந்த 40ஆவது நாள் அன்று முதல் விஜயம் செய்தார்கள். அதன்பின்னர் 1968ஆம் ஆண்டு முதல் வருடாவருடம் இந்திய விஜயத்தை மேற்கொண்டு சுமார் 3 மாதங்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து பலநூறு பக்தர்களை ஆசீர்வதித்து அருள்புரிந்து ஆன்மீக அறிவு புகட்டை வருகிறார்கள்.

இதேபோல் 1998ஆம் ஆண்டு முதல் துபை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அங்குள்ள பலநூறு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் நல்கி அருள்பாலித்து ஆன்மீக அறிவு போதித்து வருகிறார்கள். இன்னும் 2002ஆம் ஆண்டு முதல் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு திருவிஜயம் செய்து அங்குள்ள பக்த கோடிகளுக்கு ஆசிர்வாதமும், அருளும், ஆன்மீக அறிவும் வழங்கி வருகிறார்கள். இவர்களின் சிறப்புக்குரிய பாட்டானார் ஜமாலிய்யா மௌலானா நாயகம் (ரலி) அவர்களைப் போல் பல நாடுகளிலும் ஏராளமான முரீதுகள் இவர்களுக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹக்களவில் நாட்டங்கொண்ட மெய்யன்பர்களே! ஆத்ம சகோதரர்களே! தீமைகளும் குழப்பங்களும், எண்ணிறந்த வழிகேடுகளும், மார்க்கத்தின் பெயரால் வழிகெட்ட கூட்டங்களும், சத்திய சன்மார்க்கத்தின் அடிப்படையான மெய்ஞ்ஞானத்தை அறிந்து மக்கள் நேர்வழி பெறுவதற்கு இடையூறுகளும் மலிந்து கிடக்கும் சோதனைக்குரிய இக்காலத்தில் நுபுவ்வத்தின் பிரதிநிதித்துவத்தைப் பெற்று இல்ஹாமையும் கராமத்துகளையும் உடைய ஹக்கின் மெய் நேசர்களைக் கண்மூடித்தனமாக எதிர்த்தும், நிராகரித்தும், தீய முடிவுகளை தேடிக் கொள்ளும் கூட்டத்தாரிடமிருந்து விடுபட்டு, கிடைத்தற்கரிய பாக்கியமாக, ஹக்கின் அருட்கொடையாக, நமக்கும் மத்தியில் காட்சியளித்துக் கொண்டிருக்கும் நமது அருமை ஷெய்கு நாயகம் அவர்களை உள்ளாலும், வெளியாலும் பரிசுத்த உள்ளத்துடனும், உறுதியான மெய் விசுவாசத்துடனும் பற்றி நின்று, அன்னாரின் பொருட்டால் இகபர நற்பேறுகளை பெற்றுக் கொள்வதோடு அன்னவர்கள் பலநூறு ஆண்டுகள் வாழ்க என்றும் வாழ்த்துவோமாக! ஆமீன்!

தந்தை நாயகம்

 
சங்கை மிகு ஷெய்கு நாயகமவர்களின் தந்தை நாயகம்
குதுபுல் அக்தாப், அஷ்ஷெய்கு ஜமாலிய்யா
அஸ்ஸய்யிது யாஸீன் மெளலானா அல்ஹாஷிமிய் (ரலி)


 

எங்கள் அருமை ஷெய்கு நாயகமவர்களின் தந்தை நாயகம் அஷ்ஷெய்கு ஜமாலிய்யா அஸ்ஸய்யிது யாஸீன் மெளலானா அல்ஹாஷிமிய் (ரலி) ஆவார்கள்.

இவர்கள் ஆத்ம ஞானச்சுடர், அஷ்ஷெய்கு அஸ்ஸெய்யித் முஹம்மது மெளலானா காதிரிய்யுல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்யு (ரலி) அவர்களுக்கும் இவர்களின் மாமா மகளாரான அஸ்ஸெய்யிதா உம்மு ஹபீபா கண்ணே (ரலி) அவர்களுக்கும் ஈழமணித்தீவதன் தென்கரை தன்னிலே விளங்காநிற்கும் நற்பதியாம் திக்குவல்லை என்னும் ஊரில் சனிக்கிழமை பின்னேரம் ஞாயிறு இரவு ஷஃபான் பிறை 27 ஹிஜ்ரி 1317 ஆங்கில வருடம் 1899 டிசம்பர் மாதம் 29ஆம் தேதி (தமிழ் வருடம் விகாரி, மார்கழி மாதம்) பிறந்தார்கள். இவர்களின் தாயார் செய்யிதுனா ஹுசைன் (ரலி) அவர்களின் வழிமுறையில் வந்தவர்கள்.

மெளலானா நாயகம் (ரலி) அவர்கள் தங்களின் 10வது வயதில் இந்தியாவிற்கு விஜயம் செய்தார்கள். மேலபாளையத்தில் அறபுக்கலை கருவூலமாகத் திகழ்ந்த "மஃநல் அஸ்பியாஉ" என்ற அரபி மதரஸாவில் சேர்ந்து ஓதினார்கள். ஓதிக்கொண்டிருந்தபோதே ‘மாதிஹிர் ரஸூல்’ என்றும் ‘ஷாஇர்’ என்றும் புகழ் பெற்றார்கள். அவர்களின் 17ம் வயதிலேயே ‘பத்வா’ என்னும் மார்க்கத்தீர்ப்பு வழங்கிடும் தகுதி பெற்றார்கள். 18ஆம் வயதில் ஆங்கிலம், தமிழ், உர்தூ, பார்ஸி, ஹிந்தி, மலையாளம் முதலாம் வேறு பல மொழிகளையும் கற்று அவற்றில் பாண்டித்தியம் பெற்று விளங்கினார்கள். உர்தூ, தமிழ் ஆகிய மொழிகளில் கவிபாடும் ஆற்றலும் பெற்றிருந்தார்கள். அல்ஹஜ்ஜுல் ஹரமைன் அஹ்மத் அலி ஆலிம் அவர்களிடத்திலும் யூஸுப் வலியுல்லாஹ் அவர்களிடத்திலும் தப்ஸீர், ஹதீஸ், உஸூல் ஹதீஸ், பிக்ஹு, உஸூல் பிக்ஹு, அகாயித், தசவ்வுப், பல்ஸபா, ஸர்பு, நஹ்வு, அதப், இன்ஷா, பலாகத், தாரீக், ஜுக்ராபிய்யா, ஸியாஸிய்யா, ஹிஸாப், இல்முல் இக்திஸாத், இல்முல் பலக், ஹன்தஸா போன்ற பல கலைகளைக் கற்று தேர்ந்தார்கள்.

இதன் பின்னர் மெளலானா நாயகம் (ரலி) அவர்கள் சென்னையை அடுத்த பளவரக்காடு என்னும் ஊரிலே வாழ்ந்து வந்த கலைகளஞ்சியமான ‘முஹம்மத் அலவிய்யுல் ஜமீலிய்’ அவர்களிடத்தில் இலக்கிய அறிவுகளையும் ‘ஹிகம்’ என்னும் தத்துவ ஞானக்கலையையும் மேலும் கற்றுத் தேர்ந்தார்கள்.

சென்னையில் உள்ள பெரம்பூர் மதரஸத்துல் ஜமாலிய்யத்துல் குல்லிய்யா எனும் மாபெரும் அரபிக் கல்லூரியிலே முதல் தர ‘மெளலவி பாஸில்’ என்ற கெள‌ரவப்பட்டம் சூட்டப்பட்டார்கள். அவர்கள் கல்வி கற்ற அறபுக் கல்லூரிகளில் ஆசிரியராகவும் பல காலம் பணிபுரிந்துள்ளார்கள்.

"கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு" என்பதை நன்கறிந்த அவர்கள் வடஇந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றார்கள். அங்கே லாகூர்ப் பல்கலைக் கழகம் என விளங்கிய இஸ்லாமிய கல்லூரியில் சேர்ந்து டாக்டர் பட்டத்திற்கு சமமான மத ஆராய்ச்சி மற்றும் பல ஆராய்ச்சியிலும் தருக்கங்களிலும் ஈடுப்பட்டு ஒரு வருடம் தங்கி ஆய்வுகள் செய்து ‘லாகூர் மெளலவி பாஸில்’ என்ற சிறப்புப் பட்டத்தையும் பெற்றார்கள்.

பின்பு தேவ்பந்த் பல்கலைக் கழகத்திற்கு சென்று உஸூல் பிக்ஹு, உஸூல் ஹதீஸ், தப்ஸீர், நாஸிஃ, மன்ஸூஃ, அஸ்பாபுன் நுதூல், தஜ்வீத், பல்ஸபா, மன்திக், இல்முல் மஆனிய், இல்முல் பயான், இல்முல் பதீஉ, உஸூல் புரூஉ, மண்கூல் மஉகூல் போன்ற அறிவுகளையும் சிற‌ப்புட‌ன் க‌ற்று ‘தேவ்ப‌ந்த் மௌல‌வி பாஸிலே அஉலா’ என்ற‌ பெரும் ப‌ட்ட‌த்தையும் பெற்றார்க‌ள். அக்க‌ல்லூரியில் சில‌கால‌ம் ஆசிரியராகவும் பணியாற்றினார்கள். அச்சமயத்தில் தப்லீக் ஸ்தாபகர் மௌலவி இல்யாஸ் அவர்களையும் தேவ்பந்தை விட்டு வெளியேறி தானாபவன் கலைக்கூடம் சென்றபோது அஷ்ரப் அலி தானவீ அவர்களையும் சந்தித்துள்ளார்கள்.

இப்படி பல கலைகளையும் திறம்படக் கற்று டாக்டர் பட்டத்திற்கு இணையான பல பட்டங்களைப் பெற்று 1921ஆம் ஆண்டு தென் இந்தியாவிற்குத் திரும்பி வந்து ஆன்மீகத் தொண்டில் அயராது ஈடுப்பட்டார்கள்.

இவர்களது அகமியம் மிகமிக உயர்வானது. அவர்கள் ஒரு கயம்பு மள்ஹருல் ஆதம். இறைமையை பிரதிபலிக்கும் கண்ணாடியானவர்கள். மஹத்துவம் மிக்க முஹம்மதிய சந்நிதானத்தின் சம்பூரண பிரதிநிதி. முஹிய்யுத்திய வெளிப்பாடு. லிஸானுல் ஹக்கானவர்கள். அவர்கள் தெளிவான சத்தியமும், சத்திய ஹக்கின் ரூஹுமானவர்கள். ஹக்கின் ஜோதி என சைக்கினையாய்க் கூறப்படும் அடையாளமும் அவர்களே ஆவார்கள். இன்னும் இதுபோன்று அவர்களின் அகமியத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போனாலும் அது ஒரு போதும் முற்றுப் பெறாது.

இவர்களை ஒரு 'நடமாடும் பல்கலைக்கழகம்' என்று சொன்னால் அது மிகையாகாது.

தென் இந்தியா, சிலோன் ஆகிய நாடுகளில் இவர்களுக்கு ஏராளமான முரீதுகள் இருந்தார்கள். இவர்கள் 1966ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி மாலை 5.30 மணியளவில் திருமுல்லைவாசலில் தங்கள் இல்லத்தில் இயற்கை எய்தினார்கள். அங்கே அவர்களுக்கு அழகிய தர்கா ஷரீப் கட்டப்பட்டுள்ளது. வருடாவருடம் கந்தூரியும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஷெய்கு நாயகமவர்களின் பாட்டானார்

 
சங்கை மிகு ஷெய்கு நாயகமவர்களின் பாட்டானார்
ஜமாலிய்யா மெளலானா என்ற அஷ்ஷெய்கு அஸ்ஸய்யித்
முஹம்மது மெளலானா காதிரிய்யுல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்யு (ரலி)
 

 

எங்கள் அருமை ஷெய்கு நாயகமவர்களின் அருமைப் பாட்டானார் அஷ்ஷெய்கு அஸ்ஸய்யித் முஹம்மது மெளலானா காதிரிய்யுல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்யு (ரலி) ஆவார்க‌ள். அவ‌ர்க‌ள் ஜ‌மாலிய்யா மெள‌லானா என்ற‌ பெய‌ர் கொண்டே பிர‌ப‌ல‌மான‌வ‌ர்க‌ள்.

ஜ‌மாலிய்யா மெள‌லானா (ர‌லி) அவ‌ர்க‌ள் அருண்மிகு ந‌க‌ர‌மாம் பக்தாத்தினிலே உள்ள‌ பாபுல் ஷெய்க் என்ற‌ இட‌த்தில் பைதுஷ் ஷுர‌பாஉ என்ற‌ இல்ல‌த்தில் ஞாயிற்றுக்கிழ‌மை பிறை இர‌ண்டு  முஹ‌ர்ர‌ம் மாத‌ம் ஹிஜ்ரி 1246 ல் பிற‌ந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் வேத‌ நெறிமுறையாம் ச‌ட்ட‌க்க‌லையும் (பிக்ஹு) க‌ச‌ட‌ற‌ க‌ற்று ப‌கீஹாக‌வும் (வேத‌ ச‌ட்ட‌ அறிவிய‌ல் ஞானி) ஷாஇராக‌வும் (க‌விஞர்) விள‌ங்கினார்க‌ள்.

காதிரிய்யாத் த‌ரீக்குக்குத் த‌ம் ஆத்ம‌ ஞான‌ த‌ந்தை அஷ்ஷெய்கு அஸ்ஸெய்யித் ஜ‌மாலுத்தீன் மெள‌லானா அல்ஹாஷிமிய் (ரலி) அவர்களிடமே பைஅத்தும் (ஞான தீட்சை) கிலாபத்தும் (உத்திராதிகாரம்) பெற்றுக் கொண்டார்கள். ஜ‌மாலிய்யா மெள‌லானா நாயகம் அவர்களுக்கு இலங்கை, இந்தியா, மலாயா, பர்மா, இராக் முதலிய நாடுகளிலே பன்னீராயிரத்துக்கும் மேற்பட்ட முரீதுகள் இருந்தார்கள். சென்றவிடமெல்லாம் பெருமதிப்பும், கராமத்தும் உடையவராகளாய் திகழ்ந்தார்கள்.

இவர்கள் அரபு மொழியில் உரைநடை எழுதுவதிலும் அறபியல் செய்யுள்கள் எழுதுவதிலும் அறபுத்தமிழ் உரைநடை எழுதுவதிலும் அறபுத் தமிழில் கவிதைகள் எழுதுவதிலும் மிக்க வல்லமை பெற்றிருந்தார்கள். இவர்கள், குன்யதுல் பாஸிலீன், மிப்தாஹுஸ் ஸாலிஹீன், மன்பஅதுல் இல்மிய்யா பராஇலுஸ் ஸாலிஹீன், துர்ரதுல் காமிலீன், மன்பஅதுர்ரஹ்மானிய்யா பீ அஹ்காமின் நபவிய்யா, துர்ரதுல் ஆரிபீன் பீ அக்லாகிஸ் ஸாலிஹீன் முதலான பல நூல்கள் எழுதியுள்ளார்கள். இவர்களே இவற்றை அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள். இவர்கள் இயற்றிய ராதிபு, ராத்திபத்துல் ஜமாலிய்யா எனும் பெயரால் விளங்குகிறது. இவர்கள் ஹஜ்ஜுக் கடமையையும் செவ்வனே நிறைவேற்றினார்கள். இவர்கள் 1371 ஜமாதுல் அவ்வல் பிறை ஒன்று திங்கள் ஸுபுஹுக்குச் சற்று முன்பு நான்கு மணி அளவில் (ஆங்கில வருடம் 1952 ஜனவர் மாதம் 28ஆம் தேதி) இயற்கை எய்தினார்கள். இவர்களின் திருவுடல் சம்பைப்பட்டினம்யென்னும் ஊரில் அவர்கள் வாழ்ந்த மெளலானா தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர்களுக்கு வயது அப்போது 118 எனவும், 140 எனவும் 108 எனவும் பலவாறு கூறப்படுகிறது. இதில் 140 வயது வாழ்ந்தார்கள் என்பதே பலரின் கூற்றாக இருக்கிறது.  இவர்கள் அடக்கவிடத்தில் பக்தர்களால் தர்ஹா ஷரீபு கட்டப்பட்டு வருடா வருடம் கந்தூரியும் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது.